சென்னை-கோவை ரெயில் உள்பட 4 வந்தே பாரத் ரெயில்கள் இந்த மாதத்தில் இயக்கப்படுகிறது!!
நாட்டின் அதிவேக ரெயில் சேவைக்காக வந்தே பாரத் ரெயில் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரெயில்களின் சேவை வழித்தட எண்ணிக்கையை ரெயில்வே அமைச்சகம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போபால் -டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயில் ஆகும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை-கோவை இடையே 12-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
வருகிற 10-ந்தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் செகந்திராபாத் தில் இருந்து திருப்பதிக்கு இந்த மாதத்திற்குள் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் வரப்பிரசாதமாக அமையும். இதேபோல் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு 15-வது வந்தே பாரத் ரெயில் இந்த மாதம் இயக்கப்பட உள்ளது.