சீனியில் கலப்படம்!!
சிகப்பு சீனியுடன் வெள்ளை சீனியைக் கலந்து விற்று பல்பொருள் அங்காடிகள் (Super Markets) மக்களை மோசடி செய்வதாக அகில இலங்கை சிற்றூண்டிகள் உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எனவே, முட்டை விவகாரத்தில் கவனம் செலுத்தியதைப் போல இந்த சம்பவம் குறித்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை சிற்றூண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் வர்த்தகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கறுப்பு சந்தையும் மோசடி செய்யும் வர்த்தகர்களும் தொடர்ந்து அப்பாவி வாடிக்கையாளர்களை ஏமாற்றினால், அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளைக் கொடுப்பதில் எதுவித அர்த்தமுமில்லை என அவர் தெரிவித்தார்.
”ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் சில்லறை விலை ரூ.220 மற்றும் ஒரு கிலோ சிகப்பு சீனியின் விலை ரூ.360 ஆகும். சிகப்பு சீனியுடன் வெள்ளை சீனியைக் கலந்து அதை சிகப்பு சீனி என அதிக விலையில் விற்று இந்தப் பல்பொருள் அங்காடிகள் ரூ.140 மேலதிக இலாபம் அடைகின்றன.
வெள்ளை சீனியை விட சிகப்பு சீனி தூய்மையானது எனக் கருதப்படுவதால் மக்கள் பெரும்பாலும் சிகப்பு சீனியையே வாங்குகின்றனர்”, என சம்பத் தெரிவித்தார்.
பொருட்களின் சிறந்த தரத்திற்காக நுகர்வோர் பல்பொருள் அங்காடிகளை விரும்புகின்றனர். ” பல்பொருள் அங்காடிகள் தொடர்ந்தும் இவ்வாறு நுகர்வோரை மோசடி செய்தால், நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த விடயம் தொடர்பில் பல்பொருள் அங்காடிகளின் முன் பொது விழிப்புணர்வு செயற்பாடு ஒன்று முன்னெடுக்க வேண்டும் என சம்பத் மேலும் தெரிவித்தார்.