தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!!
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘ராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையான தனுஷ்கோடிக்கும் இடையிலான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதன்மூலம் ஏற்படும் சாதகத் தன்மை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு 3 கோடி பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை ராமல் பாலம் ஊடாக அழைத்து வந்தால் அதன்மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்துள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.