காங்கிரஸ் தலைவர்களின் நோக்கம் முதல் மந்திரி பதவி மட்டுமே, மக்கள் நலன் அல்ல – பசவராஜ் பொம்மை!!
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி கனவில் இருந்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது. இரு தலைவர்களுமே தங்களுக்கு கிடைக்காத சி.எம். சீட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் முக்கிய நோக்கம் அதிகாரமும், முதல் மந்திரி பதவியும் தான், கர்நாடக மக்களின் நலன் அல்ல என தெரிவித்தார்.