ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது. எலத்தூர் அருகே ரெயில் சென்ற போது டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் மற்றும் பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அலறியடித்தப்படி ரெயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனை கண்டதும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
ரெயில் கண்ணூர் வந்து சேர்ந்த பின்னர் பெட்டியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணும், குழந்தையையும் காணவில்லை. போலீசார் எரிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடியபோது, அவை தண்டவாளத்தில் கருகிய நிலையில் கிடந்தன. உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே குதித்த போது அடிப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இதுபோல இன்னொருவரின் உடலும் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பயணிகள் மீது தீ வைத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சிவப்பு தொப்பி அணிந்த நபர் ஒருவர் ரெயிலில் இருந்து இறங்கி மெயின் ரோட்டிற்கு செல்வது தெரியவந்தது.
அந்த நபர் சிறிது நேரம் சாலையில் காத்திருந்தார். அப்போது இன்னொரு நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வருகிறார். அந்த நபருடன், ரெயிலில் இருந்து குதித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்கிறார். அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க ரெயிலில் இருந்த பயணிகளிடம் கேட்டு போலீசார் படம் வரைந்தனர். அந்த படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மர்மநபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.