சீனாவிற்கு அமெரிக்கா கண்டனம்: வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலத்தை, சீனா தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் எனவும் கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை (5 மலை சிகரம், இரண்டு ஆறு உட்பட) சீனா மாற்றி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ‘அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்றளவும் உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வருங்காலத்திலும் எப்போதும் இதே நிலை தொடரும்’ என்றார்.
இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? என்று எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ‘இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் மற்றொரு முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் உள்ளூர் பெயர்களை சீனா மாற்றியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறோம். அந்த பகுதியை உரிமை கோருவதற்கான முயற்சியாக இதனை பார்க்கிறோம்’ என்றார்.