முடிவுக்கு வந்த இழுபறி.. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14-இல் தேர்தல்!!!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பஞ்சாப் மாகாணத்திற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பஞ்சாப் மாகாண தேர்தலை ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது. இந்த முடிவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி சார்பில் தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அடா பாண்டியால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்து, தேர்தல் தேதி பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஏற்கனவே பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அத்துடன் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சார்பில் பஞ்சாப் மாகாணத்திற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் பஞ்சாப் மாகாண தேர்தல் மே 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் திட்டங்கள் திருத்தப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெற ஏப்ரல் 19 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 20 ஆம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட இருக்கிறது. முன்னதாக பஞ்சாப் மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் ஜனநாயக விரோத செயல் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.