என்னை கொல்ல உத்தவ் தாக்கரே கூலிப்படையை ஏவினார்: நாராயண் ரானே குற்றச்சாட்டு!!
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொள்முதல் செய்த மருந்து பொருட்களில் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலுக்கு உத்தவ் தாக்கரே தான் முழு பொறுப்பு ஆவார்.
அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். இதற்காக அவர் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவினார். இதுபோன்ற நபர்களிடம் இருந்து எனக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போன் அழைப்புகள் வந்தன. உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார். ஆனால் அவர்கள் யாராலும் என்னை தொடக்கூட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மத்திய மந்திரி நாராயண் ரானே, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.