லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!!
லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெருசலேத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்காக கூடிய முஸ்லிம்களை இஸ்ரேல் போலீசார் அடித்து விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீன தீவிரவாத குழுக்கள், நேற்றுமுன்தினம் இஸ்ரேலை நோக்கி ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். இதே போல் லெபனானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசினர். இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு லெபனானில் நேற்று வான்வெளி தாக்குதலை நடத்தியது.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காஸாவிலும் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் நமது எதிரிகள் நம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதற்கிடையே,மேற்கு கரையில் காரில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல்,பாலஸ்தீனர்கள் இடையேயான பிரச்னையால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.