‘கேட்வே ஆப் இந்தியா’வை புதுப்பிக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு: அதிகாரி தகவல்!!
மும்பையில் பிரபலமான கேட்வே ஆப் இந்தியா கட்டிடம் உள்ளது. இதை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்து வருகின்றனர். கேட்வே ஆப் இந்தியா கட்டிடத்தில் லேசான விரிசல் விழுந்து இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சில விரிசல்கள் இருந்தாலும் கேட்வே ஆப் இந்தியா கட்டிடம் உறுதியான நிலையில் இருப்பதாக மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கேட்வே ஆப் இந்தியாவை புதுப்பித்து பாதுகாக்க ரூ.8.98 கோடியை மாநில அரசு ஒதுக்கி உள்ளது.
இதுதொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் தேஜாஸ் கார்கே கூறுகையில், ” மாநில கலாசார துறை பட்ஜெட்டில் மறுசீரமைப்புகான பணத்தை ஒதுக்கி உள்ளது. கேட்வே ஆப் இந்தியா மறுசீரமைப்பு பணிக்கான டெண்டரை தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனரகம் விரைவில் வெளியிடும் ” என்றார். கேட்வே ஆப் இந்தியாவை புதுப்பிக்கும் பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்கி ஒரு ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.