தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்- தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள்!!
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. கோவில் வளாகம், வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ், மாட வீதிகள், தேங்காய் உடைக்கும் இடம், லட்டு பிரசாதம் வழங்கும் இடம், அன்னதான பிரசாத கூடம், பஸ் நிலையம், விடுதி வளாகங்கள், சாலைகளில் பக்தர்கள் நிரம்பி வருகின்றனர். வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் பக்தர்கள் நிரம்பி காத்திருக்கின்றனர். நாராயணகிரி பூங்கா மற்றும் பாறை வளைவு வரை பக்தர்கள் வரிசையில் உள்ளனர். சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்காக காத்துக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மற்றும் திருப்பதிக்கு வர வேண்டும்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். திருப்பதியில் நேற்று 85,450 பேர் தரிசனம் செய்தனர். 43,862 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தற்காக தெலுங்கானா மாநிலம் நாகர்கோல் பகுதியை சேர்ந்த சுமன் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்தார்.
தன்னிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் திருமலையில் இருந்த வேணு என்பவரை தரிசன டிக்கெட் கேட்டு அணுகினார். அவர் 7 சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை கொடுத்து இருந்து ரூ.30 ஆயிரம் பெற்றுக் கொண்டார். தரிசனத்திற்கு சென்றபோது தேவஸ்தான அதிகாரிகள் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பரிசோதனை செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. சுமன் இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து வேணுவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.