6.5 பில். அமெ. டொலர்கள் கையிருப்பு வேண்டும் !!
இலங்கை, மூன்று மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான தொகைக்கு சமமான 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கையிருப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், துறை சார்ந்த வல்லுனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வெளிநாட்டு கையிருப்பை 6.5 பில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமாக அதிகரிக்குமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சத்தில், இலங்கையின் கையிருப்பு சில நாட்களில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக காணப்பட்டது.
அத்துடன், எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நிதியை வெளிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி போராடியது.
எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில், நிலைமை கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கும் நிபுணர்கள், 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.