இலங்கை அரசாங்கத்தின் நகர்த்தல் மனு தள்ளுபடி !!
இறையாண்மைப் பத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாததற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கியால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த நகர்த்தல் மனுவை அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனம் தாக்கல் செய்த நகர்த்தல் மனுவே நிராகரிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக வழக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மைப் பத்திரங்களின் பதிவுதாரர் செடே அன்ட் கோ என்பதால் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தனது மனுவில் குறிப்பிட்ட போதும், வங்கிக்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு, 2022ஆம் ஜூலை 25ஆம் திகதி முதிர்ச்சியடைந்த 250 மில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களை 5.875 சதவீத வட்டியில் செலுத்த வேண்டியிருந்தது.
இலங்கைக்கு வழங்கிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் முழுத் தொகையையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் வட்டியுடன் செலுத்துமாறு உத்தரவிடக் கோரியே ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்திருந்தது.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது உள்ளூர் வங்கிகளின் இறையாண்மைப் பத்திரங்கள் குறித்து கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் இது, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் வங்கிகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் வைத்திருக்கும் இறையாண்மைப் பத்திரங்கள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டதாக வங்கி குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.