33 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி- தொகுதி பக்கம் தலை காட்டவில்லை!!
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் 105 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அம்மாநிலத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா இருந்தாலும் 40 எம்.எல்.ஏக்கள் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்- மந்திரியாக உள்ளார். மகாராஷ்டிரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 150 -க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போதைய எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் குறித்து கட்சி மேலிடம் ரகசிய சர்வே நடத்தியது.
இதில் 33 எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில் எல்லைப்பகுதிகளை சேர்ந்த 20 தொகுதி எம்.எல்.ஏக்களும் அடங்கும். இவர்கள் தேர்தலில் ஜெயித்த பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வப்போது மட்டும் சென்று வருவதாக தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தலைநகர் மும்பையிலேயே குடும்பத்துடன் தங்கி உள்ளதால் அவர்கள் தொகுதி மக்களிடம் அந்த அளவு தொடர்பில் இல்லாததும் இதனால் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்து வருவதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளது.மேலும் அரசின் நலதிட்டங்கள் குறித்து அந்த எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி மக்களிடம் சரிவர கொண்டு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எம்.எல்.ஏக்களின் இந்த செயல்பாடுகளால் அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்ய பாரதிய ஜனதா அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. வருகிற தேர்தலில் பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளான 33 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தெரிகிறது. பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு கட்சியை மேலும் வலுப்படுத்த கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் கூறியதாவது:- சில தொகுதிகளில் சாதிகளின் எண்ணிக்கை மாறி இருக்கிறது. இதனால் சாதி வாரிய கணக்கெடுப்பில் கட்சி நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை அடிக்கடி கூட்டி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என அந்தந்த தொகுதி தலைவர்களுக்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. 2023- ஆம் ஆண்டு பட்ஜெட் மிகச்சிறந்ததாக அமைந்துள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக விளக்கி கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம். பொது மக்களிடம் எப்போதும் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் தெரிவித்து உள்ளோம். சமூக வலைதளங்களை அதிகளவு பயன்படுத்தி பொது மக்களுடன் தொடர்பில் இருக்குமாறு நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. இதன் மூலம் வருகிற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.