சிறுவனுக்கு முத்தமிட்ட வீடியோ வைரல்: மன்னிப்புக் கோரிய தலாய் லாமா – பின்புலம் என்ன?
திபெத் புத்த மதகுரு தலைவர் தலாய் லாமா ஒரு சிறுவனிடம் முத்தம் கோரிய காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தலாய் லாமா சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது பெற்றோர் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் தலாய் லாமாவை ஒரு சிறுவன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த காட்சிகள் சர்ச்சையாகி உள்ளது. அந்த வீடியோவில் சிறுவன், தலாய் லாமாவை அரவணைக்கலாமா எனக் கோருகிறார். அதற்கு தலாய் லாமா விளையாட்டாக செய்த காரியத்துக்கு வருந்துகிறார்.
அந்தச் சம்பவத்திற்காக சிறுவனிடமும், அவரது பெற்றோர், உலகம் முழுவதும் உள்ள சிறுவனின் நண்பர்களிடமும் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே அவர் சந்திக்கும் மக்களிடம் வேடிக்கையாக நடந்து கொள்வது வழக்கம். கேமரா முன்னதாக இருந்தாலும், பொதுமக்கள் முன்னதாக இருந்தாலும் அவர் அதுபோல் வேடிக்கையாக நடந்து கொள்வார். இருப்பினும் அந்தச் சம்பவத்திற்கு அவர் வருந்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? முன்னதாக நேற்று இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் சிறுவனின் உதட்டில் தலாய் லாமா முத்தமிடுகிறார். பின்னர் அச்சிறுவனை தலாய் லாமா தனக்கும் அவ்வாறே முத்தமிடுமாறும் தனது நாக்கை உறிஞ்சுமாறும் கூறுகிறார். இந்த வீடியோ உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோபல் பரிசு வென்ற மதகுரு உலக மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்ற தலாய் லாமா இவ்வாறாக செய்தது பாலியல் சீண்டலே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கேமரா முன்னால் நடந்த இந்த சம்பவத்தை சாட்சியாக வைத்து அவரை மதகுரு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர் தலாய் லாமாவிடம் அவருக்கு ஒரு பெண் சீடராக முடியுமா அடுத்த மதகுருவாக அவர் உருவாக முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “எனக்கு அடுத்ததாக இப்பதவியில் ஒரு பெண் அமர வேண்டுமென்றால் அவர் நிச்சயமாக அனைவரையும் வசீகரிப்பவராக இருக்க வேண்டும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
அதேபோல், கடந்த 2018-ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த புத்த மத மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற தலாய் லாமாவிடம் அந்நாட்டு ஊடகம் பேட்டியெடுத்தது. அப்போது அவரிடம் 1990-களில் ஐரோப்பாவின் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் புத்த மத போதகர்களால் நிகழ்த்தப்பட்டதாக எழுந்த பாலியல் பலாத்காரங்கள் புகார் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது,
அப்போது தலாய் லாமா “அதுபற்றி எனக்கு எப்போதோ தெரியும். அதில் புதிதாக ஒன்றுமில்லை” எனக் கூறியிருந்தார். மேலும், ”பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு புத்த மத கோட்பாடுகள் பற்றி அக்கறையில்லை. இப்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்ட பின்னர் மக்கள் தான் அவர்களின் அவமானத்தைப் பற்றி பேசுகின்றனர். அவர்களுக்கோ எந்தவித அவமானமும் இருக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
தலாய் லாமாவின் நெதர்லாந்து பயணத்தின்போது பாதிக்கப்பட்ட 25 பெண்களில் 4 பேர் அவரை அப்போது நேரில் சந்தித்து தங்களுக்கு நீதி கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.