கழிவு ஆலையில் தீ விபத்து- கொச்சி மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்க கேரள உயர் நீதிமன்றம் தடை !!
கேரளா மாநிலத்தில் உள்ள பிரம்மபுரம் கழிவு ஆலையில் கடந்த மார்ச் 2ம் தேதி தீப்பிடித்தது. அதை அதிகாரிகள் மார்ச் 12ம் தேதிதான் முழுவதுமாக அணைக்க முடிந்தது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தால் கொச்சி துறைமுக நகரமே நச்சுப் புகையால் சூழப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கொச்சி மாநகராட்சிக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கொச்சி மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. 8 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம், மே 2ம் தேதி நிலவரத்தை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சிச் செயலாளருக்கு உத்தரவிட்டது. பிரம்மபுரத்தில் நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.