;
Athirady Tamil News

மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில் 141 பேர் இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்காகத் தெரிவு!!

0

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில் 141 பேர் இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலவச கண்புரை சத்திரசிகிச்சை தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்,யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளிகளுக்கான இலவச கண்புரை சத்திரசிகிச்சை திட்டம் யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக சில அமைப்புக்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில் 141 பேர் கண்புரை சத்திரசிகிச்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக 50 பேருக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 18 ஆம் திகதியும், இரண்டாம் கட்டமாக 50 பேருக்கு சித்திரை மாதம் 25 ஆம் திகதியும் ஏனையவர்களுக்கு மே மாதத்திலும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் அவர்களை மீள மருதங்கேணிக்கு அழைத்துச் செல்வதற்கும் போக்குவரத்து ஏற்பாடுகள் சுகாதார திணைக்களத்தினால் இலவசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

சித்திரை 18 ஆம் தகதி சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் அதற்கு முதல்நாளான சித்திரை 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு மருதன்கேணி, அம்பன், முள்ளியான் வைத்தியசாலைகளுக்கு சமூகம் தரல் வேண்டும்.

சித்திரை 25 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் அதற்கு முதல்நாளான 24 ஆம் திகதி காலை 8 மணிக்கு மேற்படி வைத்தியசாலைகளுக்குச் சமூகம் தர வேண்டும். சத்திர சிகிச்சைக்குப் பின்னர் அன்றைய தினம் மாலையிலேயே அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து மருதங்கேணிக்கு அழைத்து செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் திகதி சம்பந்தப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்கனவே சுகாதார திணைக்களத்தினால் தொலைபேசிமூலம் நேரடியாக அறியத்தரப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நோயாளர்களை உரிய நேரத்தில் சமூகமளித்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.