சூடுபிடிக்கும் சட்டசபைத் தேர்தல்- கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள். வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம். பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் டெபாசிட் தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மனுதாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.