அமெரிக்காவின் நியூஜெர்சியில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண திரண்ட சுற்றுலா பயணிகள்; ரூ.900 கொடுத்து எடுத்துச் செல்லலாம்..!!!
அமெரிக்காவின் நியூஜெர்சியில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டுள்ளனர். அமெரிக்காவில் அழகிய தோட்டங்களும், ஆறுகளும், பனி மூடிய சிகரங்களும் நிறைந்த நியூஜெர்சியின் சுவீடன் போரோ நகரில் அமைக்கப்பட்டுள்ள துலிப் மலர் தோட்டத்தில் சீசன் கலைக்கட்டியுள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் 78 வகையில் விதவிதமாக பூத்து குலுங்கும் 80 லட்சம் துலிப் மலர்கள் பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.
கடந்த 30ம் தொடங்கிய துலிப் மலர் திருவிழா இம்மாதம் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. துலிப் மலர் தோட்டத்தை பார்வையிட நுழைவு கட்டணமாக 1300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிவப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்வையிடுவது மட்டுமின்றி விரும்பினால் 900 ரூபாய் கொடுத்து மலரை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துலிப் மலர் தோட்டத்தை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.