;
Athirady Tamil News

உக்ரைன் களத்தில் பிரிட்டன் படைகள் – அமெரிக்க இராணுவ ஆவண கசிவால் பரபரப்பு !!

0

ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் அமெரிக்க உளவுத் துறையின் இரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்,வெளிப்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கடந்த வார இறுதியில் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து, அவை உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான செய்தி மூலம் போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ரொக்கெட்டுகளை வழங்க எகிப்து இரகசியமாக திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது உக்ரைனில் போரில் ரஷ்ய படைகளுக்கு எதிராக பிரித்தானிய சிறப்பு படை பிரிவு நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

கசிந்த கோப்புகளில் மூலம் 50 பிரித்தானிய சிறப்பு படைகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதில் பெரும்பாலும் எலைட் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (எஸ்.ஏ.எஸ்) படைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை உக்ரைனில் இருந்த மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சிறப்புப் படை வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிரித்தானியராக இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும், உக்ரைனில் இந்த சிறப்புப் படைகள் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதை அந்த ஆவணம் குறிப்பிடவில்லை. மார்ச் 23ம் திகதியிட்ட கசிந்த ஆவணம், பிரித்தானியாவை சேர்ந்த (50) மற்றும் அண்டை நாடுகளான நேட்டோ உறுப்பினர்களான லாட்வியா (17), பிரான்ஸ் (15), அமெரிக்கா (14), மற்றும் நெதர்லாந்து (1) ஆகியவை உக்ரைனில் உள்ள உயரடுக்கு படைகளின் மிகப்பெரிய குழுவைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.

கசிந்த இந்த விவகாரம் குறித்து பிரித்தானியா அரசாங்கம் இன்னும் எந்த விளக்கமும் தராமல் மௌனம் காக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.