காஸ்மீரில் பண்டிகையின் போது திடீரென உடைந்து விழுந்த பாலம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பைசாகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஓடையின் மீதுள்ள தரைப்பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் செனானி தொகுதியின் பெயின் கிராமத்தில் உள்ள பெனி சங்கம் என்ற இடத்தில் நடந்துள்ளது.
இவ்வாறு பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் காயமடைந்துள்ளதாக உதம்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட மேம்பாலமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து உதம்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் கூறுகையில், ‘பைசாகி பண்டிகையின் போது,கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே, துணை இராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பைசாகி பண்டிகையின் போது, நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.