சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்- கெஜ்ரிவாலிடம் தீவிர விசாரணை!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை ஆம்ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்த கொள்கை மாற்றத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக 849 மதுபான கடைகளுக்கு புதிய மதுபான கொள்கை அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல 100 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆம்ஆத்மி அரசு அறிவித்தது.
என்றாலும் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். புதிய மதுபான கொள்கை மூலம் முறைகேடாக சம்பாதித்த பணத்தில் 100 கோடி ரூபாயை கோவா தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து புதிய மதுபானக்கொள்கையை அறிவித்த ஆம்ஆத்மி அரசின் துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் டெல்லி ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் புதிய மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. விசாரணை அமைப்புகளை தூண்டிவிட்டு ஆம்ஆத்மியை முடக்க முயற்சி நடப்பதாக கெஜ்ரிவால் நேற்று பேட்டி அளித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் விசாரணைக்கு ஆஜராவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி மற்றும் ஏராளமான ஆம்ஆத்மி மூத்த நிர்வாகிகள் உடன் சென்றனர். காரில் டெல்லி சாலையில் அவர்கள் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றனர்.
சில இடங்களில் ஆம் ஆத்மி தொண்டர்கள் சி.பி.ஐ.யை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே முதல்-மந்திரி கெஜ்ரிவால் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். திட்டமிட்டபடி 11 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நிலவும் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படுவாதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். கெஜ்ரிவால் வருகையை முன்னிட்டு சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.