முதல்-மந்திரியாக அஜித் பவார் திட்டம்- மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம்? !!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதால் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதையடுத்து பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். ஆனால் இந்த அரசு 72 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
சரத்பவாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை இழுத்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது ஆட்சியும், சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் உள்ளது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீப காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்ப வாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது. தீர்ப்பு ஷிண்டே தரப்புக்கு எதிராக அமைந்தால் ஆட்சியை காப்பாற்றுவதற்காக அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் ஆட்சியை தொடருவதற்கு பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்போது அஜித் பவார் தன்வசம் 35 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி தந்தால் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டமும் நடை முறைக்கு வராது. ஆனால் இந்த கூட்டணிக்கு சரத்பவார் ஒப்புதல் தரமாட்டார் என்பதால் அவரின் ஆசியை பெறுவதற்காக அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதே நேரம் பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு சரத்பவார் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சரத்பவார், ராகுல்காந்தியை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார். இந்நிலையில் கூட்டணி மாறினால் தனது அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படலாம் எனவும், பா.ஜனதா கூட்டணியை விரும்பவில்லை எனவும் அவர் அஜித் பவாரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சி அமைந்த சில மணி நேரங்களிலேயே அஜித் பவார் தனது நிலையை மாற்றி கொண்டு கட்சி தலைமைக்கு அடிபணிந்தார். எனவே தற்போது கட்சி தலைமைக்கு எதிராக அஜித் பவாரின் பின்னால் செல்வது தங்கள் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். ஆனாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் சரத்பவாரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அஜித் பவாரை வற்புறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் கடந்த 8-ந்தேதி அஜித் பவார் திடீரென டெல்லிக்கு சென்று பா.ஜனதா மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியின் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோர் அஜித் பவாருடன் சென்றதாகவும், பேச்சு வார்த்தையின் போது அமைச்சரவை இலாகாக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதுதொடர்பாக மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், மகாராஷ்டிராவை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி தற்போது ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது. உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஆட்சி மற்றும் கட்சி சின்னத்தை இழந்தாலும் கூட மாநிலத்தில் அவர்களின் புகழ் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் மாநிலத்தில் மொத்தமுள்ள 48 பாராளு மன்ற தொகுதிகளில் 33 இடங்களை மகாவிகாஸ் அகாடி கூட்டணி கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறப்படுகிறது. எனவே மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை. அதற்காக தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர பா.ஜனதா விரும்புகிறது என்றனர்.