திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்: நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!!
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசன டிக்கெட் இல்லாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பக்தர்கள் எப்படியாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் புரோக்கர்களை நாடி செல்கின்றனர். அவர்கள் பக்தர்களிடம் 300 தரிசன டிக்கெட் கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகள் மற்றும் சுப்ரபாத சேவை வி.ஐ.பி. தரிசனம் பெற்று தருவதாக பல ஆயிரம் வாங்கிக் கொண்டு போலி தரிசன டிக்கெட்களை தருகின்றனர். போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகள் சோதனை செய்யும் போது அவை போலி டிக்கெட்டுகள் என்பது கண்டறிந்து பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதுகுறித்து தேவஸ்தானங்களுக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன.
புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர்களை கைது செய்து வருகின்றனர். இதேபோல் திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலியான இணையதளங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதை உண்மை என நம்பும் பக்தர்கள் போலி இணையதளங்களில் தரிசனத்தை கேட்டு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். இது குறித்தும் தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. புகாரின் பேரில் பக்தர்களை ஏமாற்றும் போலி இணையதளங்கள் மீது ஐடி துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சுமார் 40 போலி இணையதளங்களை ஐடி துறை கண்டறிந்துள்ளது. இந்த இணையதளங்களின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஐடி துறை பொது மேலாளர் சந்தீப் திருமலை போலீசில் புகார் அளித்தார். பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை தேடும் போது அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமே ஆன்லைனில் தெரியுமாறு உறுதிசெய்ய ஐடி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.