ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!!
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது:- ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் தடையை மீறி ஒருசிலர் செல்போனை கோவிலுக்குள் எடுத்துச் செல்கின்றனர். கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் புனிதம் கெடுகிறது. சிலர் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இது, தகாத செயலாகும். கோவிலின் புனிதத்தை காக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், பக்தர்களும் கோவில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நகலை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.