தண்ணீர் இருப்பு மற்றும் நுகர்வு குறித்த சிறப்பு பட்ஜெட்- பினராயி விஜயன் தகவல்!!
கேரளாவில் ஏராளமான நீர்நிலைகள் இருந்தாலும் அங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- கேரளாவில் 44 ஆறுகள், உப்பங்கழிகள், ஓடைகள், நீர்நிலைகள் உள்ளன. இருந்தபோதிலும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கோடை காலத்தில் இந்த பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் கேரள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளாவில் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் பெறப்படும் தண்ணீரின் அளவு நீர் பட்ஜெட்டில் இடம்பெறும்.
கேரளாவில் நீர் இருப்பு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நீர் சேமிப்பை உறுதி செய்யவும், நீர் நுகர்வை கணக்கிடுவதற்கும், அதற்கான திட்டங்களை வகுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவி புரியும். இதன்மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், நீர் சேமிப்பை விஞ்ஞானரீதியில் மேம்படுத்தவும், இந்த திட்டம் உதவிபுரியும். இதனை நீர்வள மேம்பாட்டு மேலாண்மை மையத்தின் உதவியுடன், மாநில நீர்வள துறையின் பிரதிநிதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படும். இந்தியாவிலேயே கேரளாவில் தான் நீர் மேலாண்மைக்காக இதுபோன்ற பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆறுகள் சீரமைப்பு, கால்வாய்கள் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.