மக்கள் தொகையில் சீனாவை முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா- ஐ.நா. சபை தகவல்!!
உலக மக்கள் தொகை 804.5 கோடியாக உள்ளது. இதில் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாட்டு சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாட்டு சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவை காட்டிலும் இந்தியாவின் மக்கள் தொகை இந்த ஆண்டு மத்திக்குள் அதிகரித்து விடும் என்று கூறியுள்ளது. அதாவது இந்த ஆண்டு (2023) மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 142 கோடியே 86 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
அதே நேரம் சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி சீனாவை காட்டிலும் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வரும் என்று ஐக்கிய நாட்டு சபை கூறியிருந்தது. இக்கணக்கெடுப்பின் படி இந்த ஆண்டு மத்தியில் சீனாவை காட்டிலும் இந்தியாவில் சுமார் 29 லட்சம் மக்கள் அதிகம் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ள இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக ஐநா வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 142 கோடியே 86 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சமாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டு சபையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் வல்லுனர்கள் இதுவரை எடுத்த தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை எடுக்கப்படும். அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
அதன்பின்பு 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த கணக்கெடுப்பு பணி தாமதமானது. எனவே இந்தியாவின் மக்கள் தொகை எந்த நாளில் சீனாவை முந்தும் என்பது குறித்த மிக சரியான தகவலை கணக்கிடமுடிய வில்லை என்று ஐக்கிய நாட்டு சபை கூறியுள்ளது. சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்தது.
இதன் காரணமாக மக்கள் தொகை பெருக்கமும் வரலாறு காணாத வகையில் குறைந்தது. ஆனால் இந்தியாவில் பிறப்பு விகிதம் சீராக இருந்தது. அதாவது இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. இது முந்தைய 10 ஆண்டுகளில் 1.7 சதவீதமாக இருந்தது. இதன் காரணமாகவே இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை காட்டிலும் அதிகமாகியது.