4 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியது!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,030, டெல்லியில் 1,537 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 8,175 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரத்து 649 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 63,562-ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைவிட 2,329 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 6 பேர், டெல்லியில் 5 பேர், சத்தீஸ்கரில் 4 பேர் உள்பட 27 பேர் இறந்துள்ளனர். மேலும் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 11-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது.