அடுத்த 15 நாளில் மகாராஷ்டிரா அரசியலில் 2 பூகம்பம் வெடிக்கும்: சுப்ரியா சுலே பகீர் தகவல்!!
தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பும் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களில் அரசியல் பூகம்பம் வெடிக்கும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.
இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், “அடுத்த 15 நாளில் 2 அரசியல் பூகம்பம் வெடிக்கும். அதில் ஒன்று டெல்லியிலும், மற்றொன்று மகாராஷ்டிராவிலும் வெடிக்கும். நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு எனது சகோதரர் (அஜித்பவார்) தான் பொறுப்பு. சந்தையில் விலை போகும் நாணயம் பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்” என்றார்.
40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருடன் செல்ல இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரியா சுலே, “எங்கள் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சரத்பவார், அஜித்பவார், மாநில கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோருடன் நிரந்தர தொடர்பில் உள்ளனர். நானும் எம்.எல்.ஏ.க்களுடன் பேசி வருகிறேன். கட்சியில் யாராவது அதிருப்தியில் இருந்தால் அது பற்றி உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்” என்றார்.