அடேங்கப்பா.. “ரூ.16,000 கோடி..” சுந்தர் பிச்சையின் சம்பளம் மட்டும் இவ்வளவா! ஸ்டன் ஆன நெட்டிசன்கள்!!
கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியரான சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதைப் பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகிவிட்டனர். இந்த நவீன உலகில் எல்லாமே இணைய வசம் என்று சென்று கொண்டு இருக்கிறது. இப்போது எது எடுத்தாலும் இணையதளம் வாயிலாகவே செய்ய வேண்டும் என்ற ஒரு சூழலே நிலவி வருகிறது.
ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது அனைத்துமே இப்போது இணைய வசம் என்று சென்று கொண்டு இருக்கிறது. இதனால் டெக் நிறுவனங்களின் கையே ஓங்கி வருகிறது.
டெக் நிறுவனங்கள்: கூகுள், பேஸ்புக், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் உலகளவில் அதிக வருவாயை ஈட்டும் டாப் நிறுவனங்களாக இருக்கிறது.. அதில் பணிபுரியும் ஐடி ஊழியர்கள் அனைவருமே கோடிகளிலேயே சம்பாதித்து வருகின்றனர். இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் டெக் துறையில் மற்ற நிறுவனங்களை வளர விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அந்த குறித்த விசாரணை அமெரிக்காவில் தனியாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இப்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆல்பாபெட் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை 2022ஆம் ஆண்டில் மொத்த ஊதியமாக சுமார் $226 மில்லியன் (சுமார் 1800 கோடி) பெற்றுள்ளார். இது அங்கே சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட 800 மடங்கு அதிகமாகும். சுந்தர் பிச்சையின் ஊதியத்தில் சுமார் 218 மில்லியன் டாலர் பங்கு ஆப்ஷன்களும் அடங்கும் என்று கூகுள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை ஊதியம்: சுந்தர் பிச்சைக்கும் கூகுளின் சராசரி ஊழியருக்கும் இடையே உள்ள மிகப் பெரிய ஊதிய இடைவெளி என்பது அங்கே இருக்கும் ஊதிய சமத்துவமின்மை குறித்த விவாதத்தை இணையத்தில் எழுப்பியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனை விட உயர் அடுக்கில் உள்ளவர்களின் ஊதியத்திற்கு முன்னுரிமை அளிப்பதைச் சிலர் விமர்சித்துள்ளனர். ஏனென்றால் சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதாவது அமெரிக்காவில் இப்போது விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதன் மத்திய வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் அனைத்து நிறுவனங்களின் வருவாயும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதில் டெக் நிறுவனங்கள் தனியாக விதிவிலக்கு இல்லை.
அதன்படி கூகுள் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கூகுள் நிறுவனம் அதன் 6% ஊழியர்கள், அதாவது 12,000 பேரை ஜனவரியில் வேலையைவிட்டு நீக்குவதாக அறிவித்தது. கொந்தளிப்பு: கூகுள் நிறுவனத்தின் வேலை நீக்கத்தைக் கண்டித்து உலகெங்கும் இருக்கும் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் ஆட்குறைப்பிற்கு எதிராகப் போராட்டம் செய்தனர். அதேபோல மார்ச் 2022இல், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் அலுவலகத்தில் கூகுள் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதுபோல பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
ஒரு பக்கம் நிதிநிலையைக் காரணம் காட்டி கூகுளில் ஆட்குறைப்பு நடவடிக்கை நடக்கும் நிலையில், மற்றொரு பக்கம் அங்கே டாப் அதிகாரி ஒருவருக்கு மட்டும் 1800 கோடி ஊதியமாக வழங்கப்படுவது பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.