லடாக் : சுதந்திர போராட்டத்தின் சுருக்கமான கதை!! (கட்டுரை)
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு 2019ம் ஆண்டு முடிவு செய்தது.
இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு தனியான சட்டமன்றம் இருக்கும் என்றும், லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்திய மத்திய அரசின் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கதாக லடாக் மக்களால் கருதப்பட்டது. அரசியல் தலைவர்களும் மத அமைப்புகளும் இதை வரவேற்றன. உண்மையில், லடாக்கில் இந்த மாற்றம் தேவை என்று பல ஆண்டுகளாக அந்த மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. லடாக்கின் முக்கிய நகரமான லே இல் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனா்.
லடாக் சுயாட்சிக்கான நவீன அரசியல் கோரிக்கைகள் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்திய சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே அதாவது, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த காலத்திலேயே தொடங்கியது.
1947 ஆம் ஆண்டில், லடாக் பௌத்த சங்கம் (Ladakh Buddhist Association-LBA) ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆட்சியாளரான மகாராஜா ஹரி சிங்கிடம் லடாக்கின் எதிர்காலத்திற்காக மூன்று திட்டங்களை முன்வைத்தது:
• மகாராஜா நேரடியாக லடாக்கை ஆள வேண்டும்; அல்லது
• லடாக் ஜம்முவின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுடன் ஒன்றிணைந்து ஒரு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும்; அல்லது
• லடாக்கை கிழக்கு பஞ்சாபுடன் இணைக்க வேண்டும்.
1949ம் ஆண்டு மே மாதம், அப்போதைய இந்தியப் பிரதமா் ஜவஹர்லால் நேருவின் லடாக் வருகைக்கு முன்னதாக, லடாக் பௌத்த சங்கம் தனது முதல் அதிகாரப்பூர்வ கோரிக்கையை பிராந்திய சுயாட்சி மற்றும் லடாக்கின் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் இவ்வாறு முன்வைத்தது.
லடாக் பௌத்த சங்கம் பிரதமா் ஜவஹா்லால் நேருவுக்கு சமா்ப்பித்த கோரிக்கையில், இனம், மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் என அனைத்து அடிப்படைகளின் மூலம் லடாக்கை ஒரு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விட்டது. அது மட்டுமல்லாமல், அதன் முந்தைய மூன்று கோரிக்கைகளையும் மீண்டும் வலியுறுத்தி இருந்தது.
என்ற போதிலும், லடாக்கை காஷ்மீரில் இருந்து பிரித்து இந்தியாவுடன் நேரடியாக இணைப்பதையே தாம் விரும்புவதாகவும் லடாக் பௌத்த சங்கம் தனது கோரிக்கையில் குறிப்பிட்டது.
லடாக் பௌத்த சங்கத்தின் கோரிக்கையின் மீது நேருவுக்கு அனுதாபம் இருந்த போதும், ஜம்மு காஷ்மீரில் அன்றிருந்த குழப்பமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, லடாக்கிற்கு எவ்வித தீா்வையும் வழங்க நேரு மறுத்து வந்தார்.
1949ம் ஆண்டு மே மாதம் பிரதமா் நேருவிடம் பௌத்த சங்கத்தின் இரண்டாவது தூதுக்குழுவும் ஒரு கோரிக்கையை முன்வைத்தது. லடாக்கில் உள்ள திபெத்திய பௌத்த மதத்தின் கெலுக்பா கிளையின் (The Gelugpa branch of Tibetan Buddhism) தலைவராக இருந்த 19வது குஷோக் பகுலா ரின்போச்சே (Kushok Bakula Rinpoche) தலைமையில் இந்த தூதுக்குழு சென்றது.
காஷ்மீர் ஆதிக்கம் செலுத்தும் லடாக்கின் நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்த தூதுக்குழு, ‘லடாக்கிற்கு அதன் தலை விதியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டது.
லடாக்கை இந்தியாவுடன் நேரடியாக இணைக்க வேண்டும் என்று கோரிய பௌத்த தூதுக்குழு, அந்த முயற்சி தோல்வியுற்றால் லடாக் திபெத்துடன் மீண்டும் ஒன்றிணைவது தொடா்பான சாத்தியம் குறித்தும் சுட்டிக்காட்டியது.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவுடன் பிரதமா் நேரு, ஜூலை 1949 இல் லடாக்கிற்குச் சென்றபோது, ஷேக் அப்துல்லா தலைவராக இருந்த ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் ( The Jammu and Kashmir National Conference- JKNC) மாவட்டத் தலைவராக குஷோக் பகுலா ரின்போச்சேவை நியமித்தார்.
இருப்பினும், 1953 இல், பட்ஜெட் அமர்வின் போது, ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கத்தைத் தாக்கி, கண்டனம் செய்து உரையாற்றிய பகுலா ரின்போச், ‘லடாக் தொடா்பான கோரிக்கை ஒரு வகுப்புவாதமல்ல என்றும், அது மாநிலம் தொடா்பான மக்களின் கோரிக்கை’ என்பதால் லடாக்கைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். அவரது பேச்சு தேசிய ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற போதும், ஜம்மு- காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பிரச்சினையால், கைகள் கட்டப்பட்டிருந்த மத்திய அரசாங்கத்திடம் இருந்து எந்த ஒரு தெளிவான, சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
1960 களில், லடாக் சுயாட்சிக்கான போராட்டத்தில் இளைஞா்களின் இயக்க ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக 1969 ஆம் ஆண்டு பல அரசியல் கோரிக்கைகளுடன் கூடிய கிளர்ச்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன.
1979 ஜூலை மாதம் லடாக் பிரதேசம் கார்கில் (Kargil) மற்றும் லே (Leh) என்று இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. கார்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டமாகவும், லே பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டமாகவும் இருந்தன.
1989 ஜூலை மாதம் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் மோதல்கள் உருவாகின. ஜம்மு காஷ்மீா் நிா்வாகம் லடாக்கை எப்போதும் ஒரு காலனியாகக் கருதுவதாகவும், லடாக்கியர்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் மூன்றாம் தரக் குடிமக்களாக புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி லடாக் பௌத்த சங்கம் போராட்டத்தை ஆரம்பித்தது.
1989 அக்டோபர் 29ம் திகதியன்று, லடாக் பௌத்த சங்கம் (Ladakh Buddhist Association – LBA), லடாக் முஸ்லீம் சங்கம் (Ladakh Muslim Association- LMA), ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து லடாக் சுயாட்சி பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடாத்தின.
இந்தப் பேச்சுவாா்த்தையில், காஷ்மீரில் கொந்தளிப்பு மேலும் அதிகரித்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக யூனியன் பிரதேச அந்தஸ்து பற்றிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, இடைக்கால தீா்வு நடவடிக்கையாக லே மற்றும் கார்கிலில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (Autonomous Hill Development Council – AHDC) ஒன்றை அமைப்பதற்கு சகல தரப்பினரும் ஒப்புக் கொண்டனா்.
மூன்றாண்டுகள் கடந்தும் மேற்படி தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படாததைத் தொடா்ந்து, போராட்டத்தை தொடரும் நோக்கில், லடாக் பௌத்த சங்கம் (LBA) லடாக் முஸ்லிம் சங்கத்தோடு LMA இணைந்து சுன்னி, ஷியா, கிறிஸ்தவ மற்றும் பௌத்த பிரதிநிதிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கியது.
1992 செப்டம்பா் 8ம் திகதி, ஐந்து வாரங்களுக்குள் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (AHDC) ஐ நிறுவுமாறு அரசாங்கத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கை செய்தியை ஒருங்கிணைப்புக் குழு அனுப்பியது. இல்லையெனில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கும் என அரசாங்கத்திற்கு அறிவித்தது.
ஜூன் 1994 இல், ஒருங்கிணைப்புக் குழு போராட்டத்தை மீண்டும் தொடங்கப் போவதாக அரசாங்கத்தை அச்சுறுத்தியது.1995ம் ஆண்டு மாா்ச் மாதம் பொதுமக்களை அணிதிரட்டிய ஒருங்கிணைப்புக் குழு உத்வேகத்துடன் போராட்டத்தை மீண்டும் தொடங்கியது.
இந்த போராட்டமே இறுதியாக இந்திய மத்திய அரசை செயலில் இறங்க வைத்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதாவது, மே 8, 1995 இல், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (Autonomous Hill Development Council – AHDC) மசோதா நிறைவேற்றப்பட்டதுடன், இதற்கான சட்டம் ஜூன் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.
1995 செப்டம்பர் மாத தொடக்கத்தில் லே (Leh) அதன் மாவட்ட கவுன்ஸில் நிா்வாகத்தைப் பெற்றது. கார்கில் (Kargil) அதன் மாவட்டத்தில் கவுன்சில் நிா்வாகத்தை ஜூலை 2003ல் காலம் தாழ்த்தி அனுமதித்தது. லே மக்கள் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலை (AHDC) இறுதி தீர்வாக அல்லாமல் இடைக்கால நடவடிக்கையாகக் கருதினா்.
2002 ம் ஆண்டு, லேவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக தமது கட்சிகளைக் கலைத்துக்கொண்டு லடாக் யூனியன் பிரதேச முன்னணியை (Ladakh Union Territory Front – LUTF) உருவாக்கி யூனியன் பிரதேச அந்தஸ்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிவதற்கான பின்னணி காரணிகளின் ஒரு சுறுக்கம் தான் இது. பல தசாப்தங்களாக பொருளாதார, அரசியல் அதிகாரப் பகிா்வு, வேண்டி போராடி வந்த லடாக் பகுதி பிரிக்கப்பட்டு, புதிய யூனியன் பிரதேசமாக மாறியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் 370 பிரிவின்படி கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு சிறப்பு உரிமைகள், வழங்கப்பட்டு வந்தன. இந்திய மத்திய அரசு திருத்த மசோதா ஒன்றின் மூலம் அவற்றை ரத்து செய்துள்ளது.
இந்த திருத்த மசோதாவின் பிரகாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் லடாக் முக்கியமான வணிகப் பாதைகளின் மத்தியில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்து வந்துள்ளது. 1960 களில் சீன அரசு திபெத் தன்னாட்சி பிராந்தியத்திற்கும் லடாக்கிற்கும் இடையிலான எல்லைகளை மூடியதால், சர்வதேச வர்த்தகம் குறைந்தது. 1974 முதல், இந்திய அரசு லடாக்கில் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. லடாக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால், இந்திய ராணுவம் இப்பகுதியில் வலுவான அரண்களை அமைத்துள்ளது.
லடாக் இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இதன் கலாச்சாரம் மற்றும் வரலாறு திபெத்தின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படுகிறது. லடாக் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதி ஆகும்.
அண்மைக்காலமாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து மீளப்பெறப்பட்டமையும் லடாக் பிாிக்க பட்டமையும் ஒரு பேசு பொருளாகவே மாறியிருந்தது. ஜம்மு – காஷ்மீரிலிருந்து லடாக் பிரிந்தது லடாக்கிற்கு கிடைத்த ஒரு மீள் சுதந்திரம் என்றே கருதப்படுகிறது. லடாக் என்னதான் சட்டசபை அற்ற ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட போதும், இந்த அளவிலான அரசியல் உாிமை அவர்களுக்கு நிம்மதி அளித்திருக்கின்றது.
முன்னணி பௌத்த ஆன்மிக தளமாகவும், உலகளவில் பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் இருக்கும் லடாக், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை இலங்கை உட்பட பல நாடுகள் வரவேற்றன. இலங்கையின் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமது டுவிட்டர் பக்கத்தில், பௌத்தப் பெரும்பான்மையுடனான முதலாவது இந்திய மாநிலமொன்று உருவாகியுள்ளது என பதிவிட்டிருந்ததும் இங்கு நினைவு கூரத்தக்கது.