பழிக்கு பழியாக ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம் – ரஷியா அதிரடி!!
உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து கொண்டது. ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷியாவின் கவனத்திற்கும் சென்றது. இதற்கிடையே, ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், ரஷியாவும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ரஷியாவில் உள்ள ஜெர்மனி தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்தது.
இதன்படி, ரஷியாவில் உள்ள ஜெர்மன் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளது. ஒட்டுமொத்த ரஷிய-ஜெர்மனி உறவுகளை தொடர்ந்து, பெரிய அளவில் அழிக்கும் வகையில் பெர்லின் ஈடுபடுகிறது என மாஸ்கோ குற்றச்சாட்டு தெரிவித்தது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டு தூதர்கள் வெளியேற உள்ளனர் என தெரிவித்தார்.