திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து அத்தாணி தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது மாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதை 10-வது வளைவு அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது லாரி பாறையில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் அனைத்தும் சாலையில் சிதறியது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் அணி வகுத்து நின்றன.
பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாலையில் கிடந்த கரும்புகளை சாலை ஓரத்தில் அகற்றினர். பின்னர் இரவு 7 மணியளவில் கரும்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல தொடங்கின. இருந்தபோதும் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.