கொச்சியில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம்- படகில் சென்று 11 தீவுகளை கண்டு ரசிக்கலாம்!!
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய இடம் என்பதால், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொச்சியில் துறைமுகம், விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. கொச்சி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று கண்டு ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம், கடல் வழியிலும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து ‘வாட்டர் மெட்ரோ’ திட்ட படகு சோதனை ஓட்டம் நடந்தது. கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு, வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது.
சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகுகள் சோதனை ஓட்டம் முடிந்து தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரூ.747 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு படகில் 100 பேர் பயணம் மேற்கொள்ளலாம். குறைந்த கட்டணம் ரூ.20, அதிக கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரெயிலில் உள்ளவாறு, கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் வாட்டர் மெட்ரோ திட்ட படகுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.