வாக்குசேகரிக்க சென்ற வேட்பாளருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் !!
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார். நேற்று அவர் ஹலகூர் அருகே உள்ள மலவள்ளி தொகுதிக்கு உட்பட்ட பாலேஹொன்னி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் அங்குள்ள பசவேஸ்வரா கோவிலில் 101 தேங்காய்களை உடைத்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது அவருக்கு கிராம மக்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்களும் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். மேலும் அவருக்கு 108 தேங்காய்களை சுற்றி உடைத்து பூரண கும்ப மரியாதை வழங்கினர். இதைப்பார்த்த கிராம மக்கள் பலரும் வியந்தனர். பின்னர் அவர்கள் இதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.