நரை முடியைத் தடுக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்!
மனிதனின் தலைமுடி எவ்வாறு நரைத்த முடியாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நரை முடி ஏற்படுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தலைமுடியை கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்கள் அவற்றின் முதிர்ச்சியடையும் திறனை இழக்கும்போது முடி நரைக்கத் தொடங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். இதற்காக எலிகளில் விஞ்ஞானிகள் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
எலியை பரிசோதனைக்கு எடுத்த காரணமாக, மனிதர்களும், எலிகளும் முடிவளர்ச்சிக்கு ஒரே மாதிரியான அணுக்களை கொண்டுள்ளன என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆராய்ச்சியின்படி, “ தலைமுடியில் உள்ள ஸ்டெம் செல்கள் முதிர்ச்சியடையும்போது அவை மெலனோசைட் ஸ்டெம் செல்லாக வளர்ச்சி பெறுகின்றன. இவைதான் முடியை அதன் இயற்கையான நிறத்தில் இருக்க உதவுகிறது. செல்கள் முதிர்ச்சியடையாத பட்சத்தில் இந்த வளர்ச்சி தடைபடுகிறது. முடி வெள்ளை நிறமாக மாறுகிறது.” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆராய்சி முடிவுகளின் மூலம், முடி எவ்வாறு நரைத்த முடியாக மாறுகிறது என்ற கூற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றனர். மேலும் நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்றும் செயல்முறை தொடர்பான ஆராய்ச்சியை தொடங்க இது உதவலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.