;
Athirady Tamil News

மேற்கு வங்காளத்தில் நாளை 12 மணி நேரம் பந்த்… பாஜக அழைப்பு!!

0

மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர் காலியாகஞ்ச் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை. வெளிநபர்களை கொண்டு வந்து காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இந்நிலையில், பழங்குடியினர் சமூகத்தின் மீது அராஜகம் நடப்பதாக கூறி, மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை 12 மணி நேர பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், ‘மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு வங்காள மாவட்டங்களில் பழங்குடியினர் சமூகத்தின் மீது மாநில நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இது போன்ற அட்டூழியங்கள், முன்னெப்போதும் இருந்ததில்லை. வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.

மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அவசரகால சேவைகள் வழக்கம்போல் இயங்கும்’ என்றார். இந்த போராட்ட அழைப்பு தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.