;
Athirady Tamil News

“ஏசு காலத்திற்கு முந்தையது!” 18,000 ஆண்டுகள் பழைய நாய்..அப்படியே உறைந்து கிடந்த அதிசயம்! ஒரே வியப்பு!!

0

உலகின் மிகவும் பழமையான நாய் என்று அறியப்பட்ட ‘டோகோர்’ குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மனிதர்கள் மற்றும் நாய்கள் இடையேயான உறவு குறித்து முக்கிய தகவல்களை அறிய உதவுவதாக இருக்கிறது. உலகின் மிக பெரிய நாடான ரஷ்யா எப்போதும் பல்வேறு ஆச்சரியங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட ரஷ்யா, வறண்ட பிரதேசங்களும் இருக்கிறது.. பனி சூழ்ந்த பிரதேசங்களும் இருக்கவே செய்கிறது.

பல ஆச்சரியங்களைக் கொண்ட ரஷ்யாவில் இப்போது ஆய்வாளர்கள் புதியதொரு விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளாகப் புதைந்திருந்த நாய்க் குட்டியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

18 ஆயிரம் ஆண்டுகள்: கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்தனர். சைபீரியாவில் சுமார் 18,000 ஆண்டுகள் பனிக்கட்டிகளில் புதைந்திருந்த பழமையான நாய்க்குட்டியைக் கண்டுபிடித்தனர். பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் 18,000 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் நாயின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. அதன் உடலை ஆய்வாளர்கள் லவ் டேலன் மற்றும் டேவ் ஸ்டாண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இருப்பினும், அது இளம் நாயா அல்லது ஓநாயா என்பது 100% உறுதியாகத் தெரியவில்லை. இந்த பழமையான நாயின் படங்கள் இணையத்திலும் வெளியாகி டிரெண்டிங் ஆனது. பலரும் எப்படி நாய் இவ்வளவு தூரம் பாதுகாக்கப்பட்ட நிலையில் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

நாயா அல்லது ஓநாயா: விலா எலும்புகள், முழுமையாக உரோமம் மற்றும் பற்கள் என அனைத்துமே பக்காவாக இருந்துள்ளது. அது நாயா அல்லது ஓநாயா என்பதில் குழப்பம் இருந்ததால், அதை ‘டோகோர்’ என்று பெயரிட்டு ஆய்வாளர்கள் அழைத்தனர். இது மட்டும் நாயாக இருந்தால், வரலாற்றிலேயே உறுதி செய்யப்பட்ட முதல் நாயாக இது இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து பரிணாம மரபியல் பேராசிரியரான டாக்டர் டேலன் கூறுகையில், “இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.. நீங்கள் அதை உங்கள் கைகளில் வைத்திருந்தால், அது எப்போதோ உயிரிழந்தது என்பதை உணர முடியாது. எதோ இப்போது உயிரிழந்த ஒன்றைப் போலவே இருக்கும்.. அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பாக இது இருந்துள்ளது.. குகை சிங்கங்கள், மாமத்கள், கம்பளி காண்டாமிருகங்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

ரேடியோகார்பன் டேடிங்க மூலம் அவர்கள் விலங்கின் வயதைக் கண்டறிந்துள்ளனர். ஓநாய்களில் இருந்து நாய்கள் பிரிந்தது அனைவருக்கும் தெரியும். மரபணு ரீதியான ஆய்வில் முதற்கட்ட முடிவுகளால் அது நாயா அல்லது ஓநாயா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே சுமார் 4 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு அது என்ன என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதாவது டோகர் ஒரு நாய் அல்ல. இது ஆரம்பக்கால நாய்களுடன் கூட நெருங்கிய தொடர்பில்லாத ஓநாய் வகையைச் சேர்ந்தது ஆகும்.. நாயின் மரபணுவை 72 பழங்கால ஓநாய்களின் மரபணுக்களுடன் ஆய்வு செய்தனர். வரலாற்றில் நாய் வளர்ப்பில் மனிதர்கள் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை நடத்தினர். இதன் மூலமே அந்த உயிரினம் நாய் இல்லை ஓநாய் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பனியுகம்: இது குறித்து லண்டன் ஆய்வாளர் ஆண்டர்ஸ் பெர்க்ஸ்ட்ராம் கூறுகையில், “பனி யுகத்தில் வளர்க்கப்பட்ட முதல் விலங்கு நாய்கள் தான்.. ஆனால், காட்டு விலங்காக இருந்த ஓநாயை எப்படி நாய்களாக மாற்றி வளர்த்தார்கள் என்பது இன்னுமே மர்மமாகவே இருக்கிறது. இது உலகில் எங்கு நடந்தது என்பது நமக்குத் தெரியாது..

அப்போது பல குழுக்கள் வாழ்ந்த நிலையில், எந்த குழு இதற்குக் காரணம்.. இதை ஒரு குழு மட்டும் செய்ததா இல்லை பல குழுக்கள் செய்ததா என எதுவும் நமக்குத் தெரியாது” என்றார். நவீன ஓநாய்களின் மரபணுக்கள் காலப்போக்கில் நிறைய மாறிவிட்டதால், ஓநாய்கள் நாய்களாக மாறிய சரியான நேரத்தைத் தெளிவாகக் கண்டறிவது கடினமாக இருந்து வருகிறது. அதேநேரம் மேற்கு யூரேசியாவிலிருந்து வந்த பழங்கால ஓநாய்களை விட, கிழக்கு யூரேசியாவிலிருந்து வரும் பழங்கால ஓநாய்களுடன் நாய்கள் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.