சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் வீடுகள், கடைகளை சூறையாடி கொள்ளையடிக்கும் ராணுவ வீரர்கள்!!
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்துள்ளது. அங்குள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இருபடையினரும் 3 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்து இருந்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் போர் நிறுத்தத்தை மீறி சூடானில் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பதற்றம் நிறைந்த டார்மர் மாகாணத்தில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த மாகாணத்தில் ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஜெனனா நகர முக்கிய சந்தை கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் போருக்கு மத்தியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ராணுவ படையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. தர்பார் பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரியும் போராட்டக்காரர்கள் கடைகள், மால்கள், மற்றும் வீடுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்கள் மற்றும் நகை, பணத்தை சூறையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.