இலங்கை தமிழரான மருத்துவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை !!
அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்த இலங்கை மருத்துவரான தமிழர் ஒருவருக்கு சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக பிரிட்ஜ்போர்ட் பெடரல் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மருத்துவரான அனந்தகுமார் தைலைநாதன் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
மெடிகேர் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான அனந்தகுமார் தில்லைநாதன், தனது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு மனநல சேவைகளை வழங்குவதற்காக அரச மருத்துவ காப்பீட்டில் கிட்டத்தட்ட $840,000 மோசடி செய்ததாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரிட்ஜ்போர்ட் ஃபெடரல் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஸ்டீபன் அண்டர்ஹில், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, அவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நன்னடத்தை அதிகாரியின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், பிரிட்ஜ்போர்ட் பெடரல் நீதிமன்றம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்த உத்தரவிட்டுள்ளதுடன், அதில் 500,000 அமெரிக்க டொலர்களை 60 நாட்களுக்குள் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.