;
Athirady Tamil News

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நானே மீண்டும் முதல்-மந்திரி: பசவராஜ் பொம்மை பேட்டி!!

0

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இதற்கு முன்பாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதாகவும், பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார். ஜே.பி.நட்டா கூறி இருப்பது குறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:- என் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக எங்கள் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, அவ்வாறு கூறி இருக்கிறார். அதனை பூர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பேன். பா.ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த கடுமையாக உழைப்பேன். பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. பா.ஜனதா கட்சியை பொறுத்தமட்டில் யார் முதல்-மந்திரியாக இருக்கிறாரோ, அவரது தலைமையில் தேர்தலை சந்திப்பது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது.

தற்போது கர்நாடகத்தில் பா.ஜனதா முதல்-மந்திரியாக நான்(பசவராஜ் பொம்மை) இருந்து வருகிறேன். எனது தலைமை மற்றும் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து செயல்படுவோம். அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், பா.ஜனதா மேலிட தலைவர்களும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவுக்கு வந்த போது, கட்சியின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பா.ஜனதா கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார். பா.ஜனதா மிகப்பெரிய கட்சி.

அந்த கட்சியின் பொறுப்பை, எனக்கு வழங்கி இருப்பது நான் செய்த புண்ணியம் ஆகும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கர், 50 காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்த தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். ஒரு திருடர்களின் மனசு, திருடர்களுக்கு மட்டுமே தெரியும். கர்நாடகத்தில் மழை வெள்ளத்தின் போது பிரதமர் மோடி வரவில்லை என்று பிரியங்கா காந்தி கூறி இருக்கிறார். அவர் யாரோ எழுதி கொடுத்ததை பேசுகிறார். மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் உள்ளார்.

பிரதமர் மோடி பற்றி தரம் குறைவாக பேசி வருகிறார். கர்நாடகத்தில் ஒரு நாளுக்கு 5 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாகவும் கூறி இருக்கிறார். ஒரு மூத்த தலைவர், தனது அனுபவத்தின்படி பேச வேண்டும். பிரதமர் மோடி பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு யானை பலம் கிடைத்துள்ளது. அதனை சகித்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். ஒரே நாளில் 5 இடங்களில் பிரசாரம் செய்யும் சாமர்த்தியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. பா.ஜனதாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.