முக்கிய பிரச்சினைகளில் மவுனத்தின் குரலாக இருக்கிறார்: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தாக்கு!!
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது.
ஆனால், சீனா, அதானி, அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கர்நாடகா போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல், பா.ஜனதாவுடன் மோசடியாளர்களுக்கு உள்ள நெருக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் ‘மவுனத்தின் குரல்’ ஆக அவர் இருந்து விடுகிறார். ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது. ஆனால், அதன் இயக்குனரின் கல்வித்தகுதி பற்றி மத்திய கல்வி அமைச்சகமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.