மே 11 முதல் எல்லோரும் வரலாம்.. அந்த கட்டாயத்தை நீக்க அமெரிக்கா முடிவு!!!
மே 12 ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில், “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், காண்டிராக்டர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு மே 11 ஆம் தேதியில் இருந்து நீக்குகிறோம்.
இதே நாளில் இருந்து கொரோனா வைரஸ் பொது சுகாதார எச்சரிக்கை காலமும் முடிவுக்கு வரும்,” என்று வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தடுப்பூசி அவசியம் என்ற விதிகள் மற்றும் பிரமாண்ட தடுப்பூசி பிரசாரம் காரணமாக பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது,” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த தேசிய சுகாதார அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.