பின்வாங்கிய ரஷ்ய படைகளின் சதி திட்டம்..!
ரஷ்ய படைகளால் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டறிய உக்ரைனிய விவசாயி ஒருவர் ”ரிமோட் கண்ட்ரோல்” மூலம் இயங்கும் உழவு இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டத்தில் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நகரமான கார்கிவ் ரஷ்ய படைகளால் முழுவதுமாக கைப்பற்றப்பட்டது.
பின்னர் உக்ரைனிய ஆயுதப் படைகளின் எதிர்ப்பு தாக்குதலை தாங்க முடியாத ரஷ்ய படைகள் கார்கிவ் நகரத்தில் இருந்து பின்வாங்கினர்.
ஆனால் இவ்வாறு பின்வாங்கிய ரஷ்ய படைகள் ஏராளமான கண்ணிவெடிகளை அங்கு பல்வேறு இடங்களில் புதைத்து வைத்து சென்றுள்ளனர்.
இதனால் உக்ரைனிய விவசாயிகள் பலர் தங்களது வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு ரஷ்ய படைகளால் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டறிய உக்ரைனிய விவசாயி ஒலெக்சாண்டர் கிரிவ்ட்சோவ் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
போரில் ரஷ்ய படைகள் விட்டுச் சென்ற பீரங்கி கவசங்களை எடுத்து அதனை அவரது உழவு இயந்திரம் மீது பொருத்தி, கண்ணிவெடி தாக்குதலை தாங்க கூடிய புதிய “ரிமோட் கண்ட்ரோலால்” இயங்க கூடிய உழவு இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
மேலும் இதனை கொண்டு அவரது விவசாய நிலத்தில் ஏதேனும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளதா என்று சோதனையிட்டு வருகிறார்.