உத்தரவாதம் வேண்டும் என ஒதுங்கி நின்றோம் !!
தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் ஓர் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக பாராளுமன்ற வாக்களிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மலையகம் 200 எனும் தொனிப் பொருளை மையப்படுத்தி மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு அண்மையில் ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “200 வருட மலையக மக்களின் வரலாற்றில் முதன்முறையாக எந்த ஒரு தொழிற்சங்கமும் மேதினத்தை கொண்டாடுவதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் அதனை கொண்டாடுகின்ற நிலையில் மலையக தொழிலாளர்கள் இல்லை.
கடந்த காலங்களில் மலையக தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் யானை விழுங்கிவிட்டதாக பொய்யான பிரசாரங்களை ஒரு சிலர் தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசிவந்தார்கள்.
எனவே இன்று அதன் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருப்பதன் காரணமாக மலையக மக்களுக்கு உண்மையிலேயே இதனை யானை தின்றவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இதன் காரணமாகவே மலையக மக்கள் மேதினமான தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கான ஆர்வத்தை காட்டவில்லை.
தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி வழங்கியுள்ளதை நாம் வரவேற்கின்ற அதேவேளை அதனை உண்மையிலேயே நடைமுறைபடுத்தவும் ஜனாதிபதி முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
ஜனாதிபதி இந்த உத’தரவாதத்தை வழங்கினாலும் எந்தளவிற்கு மொட்டு கட்சியின் அழுத்தத்திற்கு மத்தியில் இதனை நடைமறைபடுத்தவார் என்ற கேள்வி எழுகின்றது.
எனவே இந்த முடிவை எந்த தடைவந்தாலும் ஜனாதிபதி நடைமுறைபடுத்த வேண்டும்.
அதனை நடைமுறைபடுத்துகின்ற பொழுது ஏதேனும் தடங்கள் எற்படுத்தப்படுமாக இருந்தால் அதனை வெற்றி கொள்வதற்கு பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையான ஆதரவை வழங்கும். இது எங்களுடைய மக்களின் நலன்சார்ந்த எடுக்கப்படுகின்ற ஒரு தீர்மானம்.
இந்த தீர்மானத்தில் அரசியல் பின்னனி எதுவும் இல்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான உமாசந்திர பிரகாஷ் ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜராம் மற்றும் மலையக மகளிர் முன்னணியும் ஏற்பாடு செய்திருந்தது.