மன்னிப்பு வழங்கிய ராணுவ தலைவர்: மியான்மரில் 2153 அரசியல் கைதிகள் விடுதலை!!
மியான்மரில் கடந்த 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பபட்ட ஆங் சாங் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் போராட்டங்கள், வன்முறை, அடக்குமுறை என அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், புத்த புனித நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து அரசியல் கைதிகளை சிறைகளில் இருந்து விடுவிக்கும் பணி இன்று தொடங்கியது. மன்னிப்பு வழங்கப்பட்டவர்களின் முழு விவரம் வெளியிடப்படவில்லை.
ஆனால், 33 ஆண்டுகள் சிறைத்தண்டன பெற்ற ஆங் சான் சூகியின் பெயர் அந்த பட்டியலில் இருக்காது என தெரிகிறது. விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்களுக்கு புதிய குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனையுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.