அகதிகள் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க வீரர்கள் 1,500 பேரை அனுப்ப முடிவு!!
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் 1,500 பேரை அனுப்ப அதிபர் ஜோபை டன் முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. ஜோபைடன் பதவி காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையே அவர், அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் மெக்சிகோ எல்லைக்கு கூடுதல் படையை அனுப்ப ஜோபைடன் முடிவு செய்து உள்ளார். வருகிற 11-ந்தேதியுடன் அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தினமும் 10 ஆயிரம் பேர் எல்லை வழியே நுழைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் கூறும்போது, “மெக்சிகோ எல்லைக்கு அனுப்பப்படும் 1,500 வீரர்கள் 90 நாட்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணியில் ஈடபடுவார்கள். கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் நேரடியாக பங்கெடுக்க மாட்டார்கள்” என்றார்.