‘தங்க குல்பி’ விற்கும் தெரு வியாபாரி!!
பல மாநிலங்களிலும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குளிர்ச்சியான சிற்றுண்டிகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் இனிப்புடன் குளிர்ந்த சுவையும் கலந்த குல்பி ஐஸ்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள சரபா பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற தெருவோர வியாபாரி ஒருவர் ‘தங்க குல்பி’ விற்பனை செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
உணவு பதிவரான கலாஷ் சோனி என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், கைகள் மற்றும் கழுத்தில் தங்க நகைகளை அணிந்து கொண்டு தெருவோர வியாபாரி ஒருவர் குல்பி வியாபாரம் செய்கிறார். அவர் குளிர்சாதன பெட்டியில் இருந்த குல்பி துண்டு ஒன்றை எடுத்து அதை 24 காரட் தங்க இலையில் பொருத்துகிறார். இந்த குல்பியின் விலை ரூ.351 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் விரும்பப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். பணத்தை வீணாக்குவதாக சிலரும், இது போலியான உண்ணக்கூடிய தங்கம், அரை காரட் கூட இல்லை என சிலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.