திருச்சூரில் அதிவேகமாக சென்ற ஆம்புலன்சு கவிழ்ந்து நோயாளி உள்பட 3 பேர் பலி!!
திருச்சூரை அடுத்த சோவனூர் பகுதியை சேர்ந்தவர் பெமீனா. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெமீனாவுக்கு இன்று அதிகாலை நோயின் தாக்கம் அதிகமானது. இதனால் பெமினாவின் உறவினர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தனர். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் ஆம்புலன்சில் பெமினாவை ஏற்றி கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சு ஆஸ்பத்திரி நோக்கி அதிவேகமாக சென்றது.
சோவனூர் நெடுஞ்சாலையில் சென்ற போது ஆம்புலன்சு டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்சு சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் சென்ற நோயாளி பெமினா உள்பட அவருக்கு துணையாக சென்ற உறவினர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு சென்ற நோயாளி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.