;
Athirady Tamil News

கர்நாடகாவில் சித்தராமையா முதல்-மந்திரி ஆக பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு!!

0

கர்நாடகாவில் வருகிற மே 10-ந் தேதி வாக்குப்பதிவும், மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும். இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளன. அதன்படி பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் வெற்றி பெறும் என்றே தெரிவிக்கின்றன. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியும் சி.எஸ்.டி.எஸ். நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன்படி கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா முதல்-மந்திரி ஆக பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதே சமயம் இளம் வாக்காளர்கள் மத்தியில் தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு உள்ளது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி 3-வது இடத்திலும், காங்கிரஸின் டி.கே.சிவகுமார் 4-வது இடத்திலும் உள்ளனர்.

பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் முதல்- மந்திரியுமான எடியூரப்பா 5-வது இடத்தில் உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவருக்கும் ஆதரவு கிடைத்து உள்ளது. மேலும் கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 56 சதவீதம்பேர் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 38சதவீதம் பேர் வேட்பாளரை பார்த்து வாக்களிப்பதாகவும் தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் மட்டுமே முதலமைச்சருக்காக வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர். காங்கிரஸ் அல்லது ஜே.டி.எஸ்.-ஐ ஆதரிக்கும் வாக்காளர்கள்தான் கட்சியை பெரிய காரணியாகக் கருதுகின்றனர். பொதுவாக பா.ஜ.க.வை விட காங்கிரசுக்கு அதிக ஆதரவு வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளை விட ஆளும் கட்சியான பா.ஜ.கவில்தான் கோஷ்டி பூசல் அதிகமாக இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லைப் பிரச்சினையைக் கையாள்வதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு சமமான மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். ஒக்கலிகர்கள் காங்கிரசுக்கு 34 சதவீதம் மற்றும் ஜே.டி.எஸ்.சுக்கு 36 சதவீதம் ஆதரவாககவும், லிங்காயத்துகள் 67 சதவீதம்பேர் பா.ஜ.க.வை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளனர். முஸ்லீம்கள் 59 சதவீதம் காங்கிரசுக்கு வாக்களிக்க அதிக விருப்பம் கொண்டுள்ளனர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க. அரசின் மீதான அதிருப்தி அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு 50 சதவீத ஆதரவும், பா.ஜ.க.வுக்கு 23 ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும், வசதியான வாக்காளர்கள் மத்தியில், காங்கிரசை விட பா.ஜ.க. பிரபலமாக உள்ளது. பா.ஜ.க.வின் விகாஸ் சங்கல்ப் யாத்ரா மற்றும் ஜே.டி.எஸ்.-ன் பஞ்சரத்ன ரத யாத்திரையை விட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா சற்று அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக ‘பொது மக்கள் கருத்து’ தெரிவித்துள்ளனர். மாநில மக்களின் முக்கிய பிரச்சினைகளாக என்ன வெல்லாம் உள்ளன என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதற்கு ஏராளமான மக்கள் தங்கள் பதில்களை வழங்கி உள்ளனர். அதன்படி நடக்க உள்ள கர்நாடக தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்சினையாக வேலையின்மையே இருக்கும் என்றும் 28 சதவீத மக்கள் தெரிவித்து உள்ளார்கள். 2 வது இடத்தில் வறுமை இருக்கும் 25 சதவீதம் பேர் பிரச்சனையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர். இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு வேலையின்மையை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

அதே நேரம் கர்நாடக கிராம புறங்களில் வறுமையே பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் வளர்ச்சி பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, கல்வி போன்றவை முக்கிய பிரச்சினைகள் என்று தலா 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 6 சதவீதம் பேர் ஊழலை முக்கிய பிரச்சனையாக கூறி உள்ளனர். ஒரு சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரம் 19 சதவீதம் பேர் இதர பிரச்சனைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.